தமிழகமா? தமிழ் நாடா? முதலமைச்சர், ஆளுநருக்கு இடையில் வெடித்த சர்ச்சை!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் டீ சென்னையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் பேசுகையில், தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று அழைப்பது தான் சரி என்று ஆளுநர் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆளும் திமுகவும் அதன் முக்கிய நிர்வாகிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையாற்ற தொடங்கிய போது திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட கட்சியினர் வாழ்க தமிழ்நாடு, என்று கூறி ஆளுநர் இருக்கையை முற்றுகையிட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
எனினும் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றி வந்தார். அப்போது தமிழக அரசு தயாரித்த அந்த உரையில் இருந்த அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி, உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் மற்றும் திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் தனது உரையில் புறக்கணித்தார்.
இது குறித்து அவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் தனது உரையில் சில குறிப்பிட்ட வார்த்தைகளை தவிர்த்துள்ளது வருந்தத்தக்கது. ஆளுநரின் உரை அவை குறிப்பில் இடம் பெறாது எனக் கூறி தீர்மானம் நிறைவேற்ற கூறிஇருந்தார்.
இதனையடுத்து அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென மரபுகளை மீறி புறப்பட்டுச் சென்றார். தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற நிகழ்வு நடந்ததில்லை என்று பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா சாலை பகுதியில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங்கில் இருப்பதாக கூறி திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தற்போது தமிழக ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழ் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற சொல்லை மீண்டும் தவிர்த்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதில் தமிழக ஆளுநர் என்றே அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என ஆர்.என்.ரவி குறிபிட்டிருந்த நிலையில் தற்போது அதனை நீக்கியுள்ளமை மீண்டும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
.