தமிழகத்தில் இருந்து தலிபான்களுக்கு ஆதரவு ; விசாரணையில் இறங்கிய தமிழக பொலிஸார்
ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய விவகாரத்தில், சமூக வலைத்தளங்களில் தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் சிலர் தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளையும் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டினை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய நிலையில், உலக நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இஸ்லாமிய அடிப்படை சித்தாந்தத்தில் தீவிரமாக இருக்கும் தலிபான் பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தான் நாட்டினை என்ன செய்யப்போகிறார்கள் என ஆப்கானிய மக்கள் முதல் உலக நாடுகள் வரை அச்சத்தில் உள்ளனர்.
ஏற்கனவே தலிபான்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும் இருக்கும் நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உட்பட அனைத்து வன்முறையும் ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
குறிப்பாக ஊடகத்துறையில் உள்ள பெண்களின் மீது பாலியல் ரீதியான வன்முறை கட்டவிழ்த்துவிடப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதுடன் ஏற்கனவே வீடு வீடாக தலிபான்கள் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய விவகாரத்தில், சமூக வலைத்தளங்களில் தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் சிலர் தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளையும் பதிவு செய்ததாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாக செயல்படும் அல்லது ஆதரவாக கருத்துக்களை வெளியிடும் நபர்களை மத்திய உளவுத்துறை கண்காணிக்கிறது என மத்திய அரசு தகவலை தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் இருந்து தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கருத்து தெரிவித்து வரும் நபர்களின் சமூக வலைதள கணக்குகள் வாயிலாக, அவர்களின் விபரங்களை சேகரித்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் அது தொடர்பாக தமிழக பொலிஸார் விசாரணை நடந்த முன்வந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர்கள் தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து இருப்பின், அவர்களின் பின்னணி குறித்து தமிழக பொலிஸார் விசாரணை செய்யும் என்றும், அவர்களின் குற்றம் உறுதியானால் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.