தமிழக அரசியலில் பரபரப்பு ; கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரம் ; புதிய அரசு உருவாகுமா?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன.
தவெகவுக்கு ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளதால், கூட்டணியின் பலம் தற்போது 113 ஆக உயர்ந்துள்ளது.
ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவின் தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பது தொடர்பில் ஆர். என். ரவி தயக்கம் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி கணக்குகள் மற்றும் பேச்சுவார்த்தை
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, பெரும்பான்மை தெளிவாக இல்லாத சூழலில், நிலையான ஆட்சியை வழங்கக்கூடிய கட்சி அல்லது கூட்டணியை ஆளுநர் தேர்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளார்.

சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளின்படி அதிக உறுப்பினர்களைக் கொண்ட அணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றாலும், “குதிரை பேரம்” ஏற்படும் அபாயம் இருந்தால் ஆளுநர் தனது முடிவை மாற்றலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
அரசியல் வட்டார தகவலின்படி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு வழங்கினால் தவெகவின் பலம் 119 ஆக உயர வாய்ப்பு உள்ளது.
அதேவேளை, ஆட்சியில் பங்கு மற்றும் நிபந்தனைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் காரணமாக ஆதரவு வழங்குதல் தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
சில அரசியல் விமர்சகர்கள், வாக்கெடுப்பு நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத சூழ்நிலையும் பெரும்பான்மையை மாற்றக்கூடியதாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள், புதிய தேர்தல் அவசியமின்றி ஜனநாயக முறையில் நிலையான அரசு உருவாக வேண்டும் எனும் அழுத்தத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகளுக்கு வெளியே ஒரு புதிய கூட்டணி ஆட்சி உருவாகும் சாத்தியம், ஒரு முக்கிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது. அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் புதிய ஆட்சி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.