தமிழக அரசியலில் பரபரப்பு ; விஜய்க்கு இன்னும் பெரும்பான்மை சவால்
தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் ஆர்.என். அர்லேக்கர் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக் பவன் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, “அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என விஜய் தெரிவித்தார்.
இதையடுத்து, பெரும்பான்மை உறுப்பினர்களின் எழுத்து மூல ஆதரவை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கட்சியின் செயலில் உள்ள உறுப்பினர் பலம் 107 ஆக குறைந்துள்ளது.
தற்போது ஆட்சி அமைக்க குறைந்தது 117 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாக இருப்பதால், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவை த.வெ.க. நாடியுள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்குவார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில், விஜய் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என். அர்லேக்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கியிருந்தார்.
தொடர்ந்து நேற்று காலை மீண்டும் ஆளுநரை சந்தித்த விஜயுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த சந்திப்பின் போது, “ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை தற்போது உங்களிடம் இல்லை. நிலையான ஆட்சியை வழங்க முடியுமா?” என ஆளுநர் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் புதிய அரசு அமைப்பு குறித்த அரசியல் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.