பாலியல் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி ; தமிழக முதல்வர் விஜய்யின் அதிரடி
கோவையை அடுத்த சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடூர சம்பவம்
சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும்.
இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த சிறுமியின் பெற்றோரிடம் முதலமைச்சர் விஜய் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அப்போது, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதி அளித்துள்ளார். மேலும், அமைச்சர்கள் விஜய் தமிழன் மற்றும் சம்பத் குமார் ஆகியோர் நேரில் சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், ரூ.7 இலட்சம் மதிப்பிலான நிவாரண காசோலையையும் வழங்கியுள்ளனர்.