அனோஜன் மரண தண்டனை விவகாரம் ; சவூதி தூதுவரை சந்திக்க தமிழ் - முஸ்லிம் கட்சிகள் கோரிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கூட்டிணைவின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள சவூதி அரேபியாவின் தூதுவரை வெள்ளிக்கிழமை (25) சந்திக்க அனுமதி கோரியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கூட்டிணைவின் பிரதிநிதிகள் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

கோரிக்கை
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்கு இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி மகஜர் ஒன்றைக் கையளிக்க கொழும்பில் உள்ள சவூதி தூதுவரை வெள்ளிக்கிழமை சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளனர்.
அத்துடன் வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், இவ்வாறான நிலைமைகள் தோற்றம் பெறும் போது செயற்படும் விதம் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளனர்.
அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளுக்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.