யாழில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை ; ஜனாதிபதி அநுரவின் செயலால் வியப்பு
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (1) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
நினைவுக்கல்லில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பெயர் பொறிக்கப்படவில்லை என்பதுடன் "பொதுமக்களது நிதியை பயன்படுத்தி ........" "மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது." என குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்துக்கான பலகையில் எழுதப்பட்டுள்ளது.
சமூகவலைத்தளங்களில் பாராட்டு
இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் அரச மொழிகளாக உள்ளபோதும், தமிழுக்கு இதுவரையும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இன்றையதினம் அது மாற்றம் பெற்றுள்ளது.
இந்நிலையில் யாழில் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்த ஜனாதிபதிக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் இன்று (1) திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால ,
கடற்றொழில் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வடக்குமாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் ,பிரதியமைச்சர்களான சுனில் வட்டஹல. நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சி்விகே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.சமிந்த பத்திராஜ ,யாழ் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் , பிரதியமைச்சர்கள் ,யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதேவேளை யாழ் மாவட்டச் செயலகத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தயினை முன்னிட்டு இன்றையதினம் முத்திரையும் தபால் தலையும் வெளியிடப்பட்ட விசேட அம்சமாகும்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








