யாழிற்கு ஜனாதிபதி விஜயம்; கெட்ட வார்த்தைகளால் ஏசிய பொலிஸார்
யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டுவதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று வருகைதந்தார்.
மயிலிட்டி பகுதியில் இன்று (01) காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர்.
விரட்டியடிக்கப்பட்ட பொதுமக்கள்
இதன்போது அப்பகுதியில் கூடியிருந்த, காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் அப்பகுதியில் நிற்க விடாமல் விரட்டியடிக்கப்பட்டனர்.
வயோதிபர்கள் எனவும் பாராது கெட்ட வார்த்தைகளால் ஏசி பொலிஸார், முதுகில் பிடித்து தள்ளினர்.
அதேவேளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ஆட்சியிலும் பொலிஸார் கடந்த காலங்களை போன்று மூர்க்கத்தனமாக செயற்பட்டமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி இன்று ஆரம்பித்து வைத்தார்.
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதி அமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.



