தமிழர் பகுதியில் இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; இனந்தெரியாத கும்பலால் தாக்குதல்
வவுனியா, பெரியார்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனந்தெரியாத கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில், அந்த இளைஞர் படுகாயமடைந்ததோடு அவரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, சுமார் எட்டுப் பேரைக் கொண்ட குழுவொன்றினால் வழிமறிக்கப்பட்டுள்ளார்.

சரமாரி தாக்குதல்
குறித்த கும்பல் அந்த இளைஞர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலுக்குள்ளாகிப் படுகாயமடைந்த இளைஞன், உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இருப்பினும், இந்தத் தாக்குதலின் காரணமாக அந்த இளைஞரின் கண்பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இளைஞரின் தரப்பால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டைத் தொடர்ந்து, தாக்குதலை நடத்திய எட்டுப் பேர் கொண்ட கும்பலைக் கைது செய்வதற்கு வவுனியா பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.