இந்திய மிளகாய் ஏற்றுமதி இடைநிறுத்தம் ; இலங்கையில் விநியோக நெருக்கடி ஏற்படும் அபாயம்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான காய்ந்த மிளகாய் அடங்கிய 120 கொள்கலன்களை விடுவிப்பதற்கு இந்திய ஏற்றுமதியாளர்கள் இராஜதந்திரத் தலையீட்டைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காய்ந்த மிளகாய் கொள்கலன்கள், ஈரப்பதம் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட அதிகமாகக் காணப்பட்டமையினால் சுமார் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், குறித்த கொள்கலன்களில் உள்ள காய்ந்த மிளகாய் கையிருப்புகளை விரைவாக விடுவிக்குமாறு இலங்கை இறக்குமதியாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தத் தாமதம் காரணமாக உள்நாட்டுச் சந்தையில் காய்ந்த மிளகாயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன், மிளகாய்த்தூள் உற்பத்தியாளர்களும் தமது உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சாதாரண சில்லறைச் சந்தையில் ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 1,800 ரூபாவை எட்டியுள்ளது.
அதேவேளை, பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 2,000 ரூபாவையும் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மறு அறிவித்தல் வரை இலங்கைக்கான காய்ந்த மிளகாய் ஏற்றுமதியை முழுமையாக இடைநிறுத்துமாறு இந்திய மிளகாய் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (Chillies Exporters Association of India) தனது உறுப்பினர்களுக்கும் வர்த்தகத் தரப்பினருக்கும் அறிவித்துள்ளது.
தற்போதைய பிரச்சினையிலிருந்து இந்திய மிளகாய் வர்த்தகத் துறை மற்றும் ஏற்றுமதியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒப்பந்தக் கடப்பாடுகளைத் தவிர்த்து, இலங்கையுடன் புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி இடைநிறுத்த அறிவிப்பும், கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையும் தொடர்ந்தால், உள்நாட்டில் காய்ந்த மிளகாய் விநியோகம் மற்றும் விலைகளில் மேலும் தாக்கம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.