தங்காலை பகுதியில் மீட்கப்பட்டவர்கள் மரணத்தில் சந்தேகம்; குழப்பத்தில் பொலிஸார்
ஹம்பாந்தோட்டை - தங்காலை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து உடலங்களாக மீட்கப்பட்டவர்களின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்ரையதினம் (22) மீட்கப்பட்ட இரண்டு உடலங்களிலும் கடல் மணல் ஒட்டியிருந்ததாகவும், காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இதனால், அவர்களின் உயிரிழப்புகளில் சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசம் கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டனரா?
இந்தநிலையில், குறித்த இருவரும் வேறு இடத்தில் கொல்லப்பட்டு சந்தேகத்திற்கிடமான அந்த வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டனரா? அல்லது விசம் கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டனரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த இருவருடன் தங்கியிருந்த ஒருவர் சுகயீனமுற்ற நிலையில், தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். இந்நிலையில் தாம் குறித்த வீட்டில் மதுபானம் அருந்தியதாக அவர் தமது மகனிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சம்பந்தப்பட்ட நபரே கப்பலிலிருந்து போதைப்பொருளை பாரவூர்தி மூலம் குறித்த வீட்டுக்குக் கொண்டு வந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றுக் குழு உறுப்பினரான உனகுருவே சாந்தவுடன் தமது தந்தை தொடர்பில் இருந்ததாக அவரது மகன் மார்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டிலிருந்து தப்பி ஓடிய பலரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.