சிறுமியை கடத்தி தாயை மிரட்டிய சந்தேக நபருக்கு நேர்ந்த கதி
அனுமதியின்றி காரில் நுழைந்து 8 வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் இன்று (7) கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கடந்த 2 ஆம் திகதி கருவாத்தோட்டம், ப்ளவர் வீதி பகுதியில் காரொன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து 8 வயது சிறுமியை உள்ளே தள்ளி மிரட்டியுள்ளார்.
நீண்ட விசாரணை
இது தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, கருவாத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேக நபர் கொலன்னாவ பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டார். அவர் கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை முடிந்ததும் மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சிறுமியின் தாய் காரில் வந்து, மகளை பின் இருக்கையில் அமர வைத்துவிட்டு, பின்னர் காரை இயக்குவதற்காக சாரதி இருக்கைக்கு சென்றபோது, விசாரணையில், திடீரென பின் இருக்கையில் அமர்ந்த மேற்படி நபர், தனது மகளை தள்ளியதோடு மிரட்டி, அவளை பயமுறுத்தியிருப்பது தெரியவந்தது.
அப்போது, சிறுமியின் தாய், சிறுமியுடன் காரில் இருந்து வௌியேறி உதவி கேட்டு சத்தமிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் தப்பிச் சென்றதோடு, வாடகை வாகனமொன்றை பயன்படுத்தி அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், தகவல் கிடைத்த பிறகு, நீண்ட விசாரணைக்கு பின்னர் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.