20 வயது யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம்; காட்டிக்கொடுத்த செருப்பு
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ தினமான சனிக்கிழமை (15) மாலை யுவதியுடன் சென்ற இளைஞர் அப்பர் வேவல்கட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யுவதி கீழ் இறத்கங்க பிரிவைச் சேர்ந்த மோகன்ராஜ் பேபி ஷானி (20) என கூறப்படுகின்றது.

யுவதி கொலை செய்யப்பட்டாரா?
யுவதியின் சடலத்தைப் பொதுமக்கள் கண்டுபிடித்ததன் பின்னர் அங்கு யுவதியின் காதலன் என கூறப்படும் நபர் சென்று வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் அணிந்திருந்த றப்பர் செருப்பு கைப்பட்டி இறந்த யுவதியின் கையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதோடு குறித்த நபர் யுவதியைக் காதலித்து வந்தார் என்ற விடயத்தை யுவதியின் தங்கை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இவர் லெல்லுப்பிட்டி, பானகொடை தோட்டத்திற்குத் தப்பிச்சென்றிருப்பதாகவும் அவரைக் கைதுசெய்ய வேவல்வத்தைப் பொலிஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரைக் கைதுசெய்ய வலியுறுத்தி இன்று காலை கம்பி அடி – செட்டிக்கடை பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலதிக தகவல்
சந்தேக நபர் அணிந்திருந்த றப்பர் செருப்பு
சம்பவம் தொடர்பில் வேவல்வத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸாரும் பிரதேச மக்களும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் இரத்தினபுரி குடுகல்வத்தை பகுதியில் இன்று (17) பிற்பகல் வேலையில் பிரதேச மக்கள் கண்டுள்ளனர்.
பிரதேச மக்கள் தம்மை அடையாளம் கண்டதை தொடர்ந்து இப்பகுதியிலுள்ள மதஸ்தலத்திற்கு ஓட முயற்சி செய்த போது அந்த மத ஸ்தல வாசலில் நின்ற மக்கள் அவரை தடுத்து விபரம் அறிந்த போது தம்மை பொய் குற்றச்சாட்டின் பேரில் தாக்குதல் நடத்த வருவதாக கூறியுள்ளார்.
இதன் பின்னர் உண்மை நிலை அறிந்து சந்தேக நபரை மதஸ்தலத்திற்கு வருகை தந்தவர்கள் இரத்தினபுரி பொலிஸாரிடம் கையளித்தனர். அதன் பின்னர் சந்தேகநபரை வேவல்வத்தை பொலிஸார் கைது செய்து இரத்தினபுரி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இது இவ்வாறிருக்க யுவதியின் சடலத்தைப் பொதுமக்கள் தேடி கண்டுபிடித்ததன் பின்னர் அந்த இடத்திற்கும் சந்தேக நபர் சென்று சடலத்தை தேடியதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் அணிந்திருந்த றப்பர் செருப்பு இறந்த யுவதியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
இப்பகுதி தோட்டத் மக்கள் மத்தியில், இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.