அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு
டித்வா சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய, மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவித்த பின்னர், அந்தக்காணிகளை மீண்டும் அளவீடு செய்ய வேண்டும் என காணி ஆணையாளர் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்துள்ளார்.

அபாய வலயங்கள்
அதற்கமைய, அபாய வலயங்களில் உள்ள காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவ்வாறு தீர்மானித்தால் அனுமதிப்பத்திரம் கொண்ட அந்தக் காணிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்து நட்டஈடு அல்லது மாற்றுக் காணி ஒன்றை வழங்கக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடமிருந்து கோரியுள்ளதாகவும் காணி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சில குடியிருப்பாளர்கள் அரச காணிகளில் அத்துமீறித் தங்கியிருக்கும் நிலையில், அவர்கள் தொடர்பாகவும் விசேட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஏற்கனவே அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள காணி அலுவலகங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகக் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்துள்ளார்.