உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ; ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு, தன்னிச்சையானதும் சட்டரீதியாக செல்லுபடியாகாததுமாகும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, கொள்கை மாற்றங்களுக்கான நிலையம் (CPA) மற்றும் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த பின்னர் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை தொடர்பான வழக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தபோது, நீதிமன்றத்திற்குள் ஞானசார தேரர் நடந்து கொண்ட விதம் தொடர்பாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதனையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், 2019ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பின் அடிப்படையில், ஞானசார தேரர் வெலிக்கடை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.