சிவப்பு சீனியின் தந்தை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன் ; சுனில் ஹந்துனெத்தி
சிவப்பு சீனியின் தந்தை என்று என்னை குறிப்பிடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்று கைத்தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (13) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வரவு - செலவுத் திட்டம்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் குறித்து எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இந்த வரவு- செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் ஏதும் அறிமுகப்படுத்தப்படவில்லை.இதை பற்றி எதிர்க்கட்சியினர் எவரும் பேசுவதில்லை.
சர்வதேச நாணய நிதியம் தயாரித்த வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் எவரும் சர்வதேச நாணய நிதியத்தை எதிர்க்கவில்லை. நாணய நிதியத்துடனான செயற்றிட்டத்தை செயற்படுத்துவதற்கு மக்கள் இவர்களுக்கு ஆணை வழங்கவில்லை.
நாணய நிதியத்தின் நிபந்தனைகள் சிறந்த முறையில் அமுல்படுத்தப்படுகிறது. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும் என்று நாணய நிதியம் குறிப்பிட வேண்டிய தேவையில்லை. நாம் தான் அதனை செய்ய வேண்டும். அரச செலவுகளை குறைத்து, சேவை வழங்கலை வினைத்திறனாக்குமாறு குறிப்பிடுவது எந்தவகையில் தவறாகும்.
தேசிய தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறையை மேம்படுத்தவும், தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கவும் 80 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு சீனி உற்பத்தியை மேம்படுத்துவதற்கு விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது என்னை சிவப்பு சீனியின் தந்தை என்று குறிப்பிடுகிறார்கள். நான் மகிழ்ச்சியடைகிறேன்.
2020 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 2502 மெற்றிக்தொன் வெள்ளை சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இதற்காக 353 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆகவே சிவப்பு சீனி உற்பத்தியை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.