அநாவசியமாக 500 பேருக்குக் கடந்த கால அமைச்சர் நியமனம் ; சுனில் குமார குற்றச்சாட்டு
2015 அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர் நீர் வழங்கல் சபைக்கு அநாவசியமாக ஐந்நூறு பேரைச் சேவையில் இணைத்துக் கொண்டதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அம்பாறை மற்றும் கண்டி அலுவலகங்களில் சங்கீத கதிரை போட்டிதான் இருந்தது, அமருவதற்கு இடமிருக்கவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் 500 பேரை அப்போதைய அமைச்சர் சேவையில் இணைத்துக் கொண்டதாக அமைச்சர் சுனில் குமார குற்றம் சுமத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தின் போது அமைச்சர் இது தொடர்பில் குறிப்பிட்டார்.
அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த ஆட்சேர்ப்புகள் நீர் வழங்கல் சபையின் செலவுகளையும் அதிகரிக்கச் செய்துள்ளன. அரசியல் அதிகாரத்தை அடிப்படையாக் கொண்டே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
அழிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் எங்கள் அரசாங்கம் மீண்டும் கட்டியெழுப்பும். நமது நாடு நெருக்கடியில் இருப்பதற்கு முக்கிய காரணம் கடந்த அரசாங்கங்கள் பெற்றுக் கொண்ட கடன்தான்.
கடன்கள் முறையாகப் பயன்படுத்தப்படாததால் இந்தப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. நிச்சயமாக, கடன் வாங்குவது தவறு அல்ல. நீர் வழங்கல் சபையும் கடன் வாங்கும் ஒரு கர்மாவுக்கு தோள் கொடுத்த நிறுவனமாகும்” என்று அமைச்சர் கூறினார்.