ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல் குறித்து சுகாஷ் கடும் கண்டனம்
தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகாரப் பின்னணியில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஊடக சுதந்திரம் ஜனநாயகத்தின் முக்கிய தூண் எனக் குறிப்பிட்டு, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதும் அழுத்தங்களுக்கு உள்ளாக்குவதும் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

அத்துடன், பிரபாகரன் டிலக்சன் என்ற ஊடகவியலாளர் அரச ஆதரவுடன் அழுத்தங்களுக்கும் விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், வடமராட்சியில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சிசிடிவி கமராவை சேதப்படுத்திய சம்பவத்தில் பொலிஸார் சட்ட நடைமுறைகளை மீறி அவரை விடுவித்ததாகவும் சுகாஷ் குற்றம்சாட்டினார்.
தமிழர் தாயகப் பகுதிகளில் காணி சுவீகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறிய அவர், தமிழர்களின் இருப்பையும் உரிமைகளையும் பாதுகாக்க ஜனநாயக ரீதியான அரசியல் நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.