வாகனத்தில் மோதியதற்கு மன்னிப்பு கேட்ட மாணவி; நடுரோட்டில் முத்தம் கொடுத்த நபர்
இருசக்கர வாகனத்தில் மோதியதற்கு மாணவி சிரித்துக் கொண்டே மன்னிப்பு கேட்டதால் இளைஞர் கோபமடைந்து இளைஞர், நடு ரோட்டில் மாணவிக்கு முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் கோவையில் கல்லூரியில் படித்து வரும் 20 வயது இளம் பெண் தனது இருசக்கர வாகனத்தில் பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு சாலை குண்டும், குழியுமாக இருந்துள்ளது.
வாகனத்தில் துரத்திச் சென்று முத்தம்
இந்நிலையில் வீதியால் சென்ற இளம் பெண்ணின் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் இளம் பெண், சுதாரித்து அந்த வாலிபரிடம் லேசாக சிரித்தபடி மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு சென்றதாக தெரிகிறது.
உடனே அந்த வாலிபர் மோதலை மறந்து விட்டு,அந்த மாணவி தன்னிடம் சிரித்துதான் பேசுகிறாள் என்று நினைத்து இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் மாணவியின் வாகனத்தின் முன் சென்று தடுத்து நிறுத்தியுள்ளார்.
பின்னர் அந்த இளம் பெண்ணிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென அந்த பெண்ணின் கையைப் பிடித்து கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பொலிஸில் முறைப்பாடு
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் சத்தமிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
சம்பவம் தொடர்பில் மாணவி பொலிஸில் முறைப்பாடு அளித்த நிலையில், பெண்ணுக்கு முத்தம் கொடுத்தவர் கோவை புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த முகமது ஷெரீப் என்பதும், அவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பதும் தெரிய வந்தது.
விசாரணையில் அந்த இளம் பெண் சம்பவம் நடந்த போது சிரித்தபடியே பேசியதால் அதை தவறாக எடுத்துக் கொண்ட அவர், பின் தொடர்ந்து சென்று பேசி முத்தமிட்டது தெரிய வந்தது.
முகமது ஷெரீப்பை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் பட்டப்பகலில் நடுரோட்டில் இளம் பெண்ணுக்கு வாலிபர் முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.