யாழ் விமான நிலைய விஸ்ததரிப்புக்கு கடும் எதிர்ப்பு
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய விஸ்ததரிப்பு என்ற பெயரில் பலாலியில் தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகளிற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை காணி உரிமையாளர்களிற்கு உடன்பாடில்லையெனில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு அனுமதிக்கப்போவதில்லையென வடக்கு ஆளுநரும் அறிவித்துள்ளார்.
எதேட்சையாதிகாரமாக முடிவுகளை எடுக்க கூடாது
இந்நிலையில் வடக்கு ஆளுநரை சந்தித்த வலிகாமம் வடக்கு பொது அமைப்புக்கள் காணி சுவீகரிப்பிற்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளன.அதனை தொடர்ந்தே காணிகளை சுவீகரிக்க ஆதரவு தரப்போவதில்லையென ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தற்போதைய அரசாங்கத்திற்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றால் வேறு இடங்களை கவனிக்கலாம் எதற்காக யாழ்ப்பாண நிலங்களை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக எதேட்சையாதிகாரமாக முடிவுகளை எடுக்க கூடாது என்றும், விமான நிலையம் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்ற தேவை இருந்தால் பயன்பாடற்ற காணிகளை பயன்படுத்தலாமே தவிர மக்கள் குடியேறும் நிலங்கள் அவர்களிடமே கையளிக்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.