நடு கடலில் நிர்க்கதியான பணியாளர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்
இலங்கைக்குத் தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில், முக்கிய இயந்திரங்கள் செயலிழந்ததால் ஆபத்தில் சிக்கியிருந்த MV INTEGRITY STAR என்ற வணிகக் கப்பலின் 14 பணியாளர்கள், இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, இன்று (26) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், கடற்படைத் தலைமையகத்தில் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு கிடைத்த தகவலின் பேரில், இலங்கை கடற்படையின் கப்பலொன்று உடனடியாக மீட்பு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது.

மீட்பு பணி
இந்தநிலையில், ஆபத்தில் சிக்கியிருந்த, இந்திய, துருக்கிய மற்றும் அஸர்பைஜான் நாட்டினரைக் கொண்ட 14 பணியாளர்களையும் கடற்படையின் கப்பல் பாதுகாப்பாக மீட்டது.
மீட்கப்பட்ட பணியாளர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
கடல்சார் ஆபத்து ஏற்பட்டால் மனித உயிர்களைக் காக்கும் சர்வதேச கடமைகளுக்கு இணங்க, இலங்கை கடற்படை இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.