STFஆல் சுற்றிவளைக்கப்பட்ட வீட்டில் சலவை இயந்திரத்தில் காத்திருந்த அதிர்ச்சி
மருந்தகம் ஒன்றை நடாத்திச் செல்லும் போர்வையில் மிக சூட்சுமமான முறையில் போதை மாத்திரை வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவரை பொல்கஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீட்டின் குளியலறையில் இருந்த சலவை இயந்திரத்திற்குள் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், போதை மாத்திரைகள் அடங்கிய 20 பொதிகளை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதை மாத்திரைகள்
சந்தேக நபர்களிடமிருந்து 2,000 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின் போது, பிரதான சந்தேக நபரின் வீட்டில் இருந்து இந்த போதை மாத்திரை தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 24 வயதுடைய கடிதரமுல்ல மற்றும் பனலிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் நீண்ட காலமாகப் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச இளைஞர்களை இலக்காகக் கொண்டு இந்த வர்த்தகத்தை முன்னெடுத்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
10 போதை மாத்திரைகள் அடங்கிய 10 அட்டைகளைக் கொண்ட ஒரு பொதியினை 10,000 ரூபாவிற்கு சந்தேக நபர்கள் விற்பனை செய்துள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.