தமிழர் பகுதியில் மாமனாரும், மருமகனும் நீண்டகாலம் அரங்கேற்றிய செயல் ; இரகசிய தகவலால் அம்பலம் விடயம்
2 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரகசிய தகவல்
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்றில் நேற்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கைதான 49 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரது வாக்குமூலம் மற்றும் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சம்மாந்துறை புற நகர் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பொலிஸ் குழுவினரால் இரு வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் மாமா மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த இரு சந்தேக நபர்கள் வசமிருந்து குஷ் , கேரளா கஞ்சா, ஐஸ் , ஹெரோயின், உட்பட பல வகையான போதைப் பொருட்கள் தொலைபேசிகள் ஒரு தொகை பணம் என்பன மீட்கப்பட்டிருந்தன.
47 வயது 68 வயது மதிக்கத்தக்க இவ்விரு சந்தேக நபர்களும் சம்மாந்துறை பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்களை வியாபாரம் செய்துள்ளதுடன் விநியோகம் செய்தும் வந்துள்ளமை விசாரணைணயில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் கைதான பிரதான சந்தேக நபர்களையும் இன்று (30) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இது தவிர பெரிய நீலாவணை பொலிஸாரின் கொழும்பு–கல்முனை பஸ்ஸின் அதிரடியான சோதனை நடவடிக்கை காரணமாக சம்மாந்துறை வரையான கைது நடவடிக்கை சம்மாந்துறை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு போதைப்பொருள் வலையமைப்பு பிடிக்கப்பட்டு பல்வேறு வகையிலான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.