டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்க மறுக்கும் பொலிஸாருக்கு கடும் எச்சரிக்கை
டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.
நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பாதுக்கை மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில பொலிசார் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன்படி, R.T.M. 93 சட்டத்தின் மூலம் 2026.05.05 ஆம் திகதியிட்ட மேலதிக செய்தி மூலம் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்தில் கூட, பின்வரும் இலவச சேவைகள் மூலம் காப்புறுதி பாதுகாப்பு செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை பொலிஸார் உறுதிசெய்து கொள்ள முடியும்.
*1338# ஐ அழைப்பதன் மூலம் காப்பீட்டு இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து உடனடியாக தகவல்களைப் பெறுதல்.