450 தேங்காய்கள் திருடிய மூவர் ; ஒரு இலட்சம் ரூபா இழப்பு
அநுராதபுரம் - நொச்சியாகம , ஹல்மில்லேவ பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றிற்குள் நுழைந்து 450 தேங்காய்களைத் திருடியதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நொச்சியாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 450 தேங்காய்களே இவ்வாறு திருடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தென்னந்தோப்பின் 70 வயதுடைய உரிமையாளரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராஜாங்கனை மாரகஹவெவ பிரதேசத்தில் வசிக்கும் 24 மற்றும் 27 வயதுடைய இரு சகோதரர்களும் நொச்சியாகம பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இளைஞனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.