சட்டப்பேரவையில் தடுமாறிய தமிழ் உச்சரிப்பு ; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி
தமிழக சட்டப்பேரவையின் பாதீட்டு கூட்டத்தொடரில் துறைசார் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 31ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி, அறிக்கையை வாசித்தபோது சில தமிழ் சொற்களைத் தடுமாறி உச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் சில சொற்களைத் தவறாக உச்சரித்ததாகக் கூறப்படும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சை விமர்சிக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில், இன்று தமிழையே குழிதோண்டிப் புதைக்கும் வகையில் தவெக ஆட்சி நடைபெறுகிறது” என விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன.
அமைச்சரின் பேச்சு மற்றும் அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் தற்போது தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.