பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக லண்டனுக்கு மேலதிக வானூர்தி சேவை ; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டமையால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்காக, கொழும்பு மற்றும் லண்டன் இடையே மேலதிக வானூர்தி சேவையை முன்னெடுக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
இந்த விசேட வானூர்தி சேவை எதிர்வரும்; 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பிலிருந்து லண்டன் (UL1205): மார்ச் 08 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 06:50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு, அன்றைய தினம் மதியம் 13:10 மணிக்கு லண்டனைச் சென்றடையும்.

லண்டனிலிருந்து கொழும்பு (UL1206):
அதே நாளில் (மார்ச் 08) பிற்பகல் 15:05 மணிக்கு லண்டனிலிருந்து புறப்பட்டு, மறுநாள் (மார்ச் 09) காலை 06:55 மணிக்கு கொழும்பைச் சென்றடையும்.
மத்திய கிழக்கு வான்பரப்பு மூடப்பட்டதால் ரத்து செய்யப்பட்ட வானூர்திகளின் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலேயே இந்த மேலதிக சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிலைமையினைத் தொடர்ந்து அவதானித்து வருவதாகவும், தேவைக்கேற்ப ஏனைய நாடுகளுக்கான மேலதிக வானூர்திகளையும் இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் வானூர்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகள் இது குறித்த மேலதிக தகவல்களைப் பெற 1979 (இலங்கைக்குள்) அல்லது +94 11 777 1979 (சர்வதேச அளவில்) என்ற இலக்கங்களையோ அல்லது +94 74 444 1979 என்ற வட்ஸ்அப் இலக்கத்தையோ தொடர்பு கொள்ளலாம்.