புற்றுநோய் மருந்து தொடர்பில் இலங்கை புற்றுநோயியல் சங்கம் கடும் கண்டனம்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராய்ச்சி குழுவால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் 'புற்றுநோய் மருந்து' குறித்து இலங்கை புற்றுநோயியல் சங்கம் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த தயாரிப்பின் நம்பகத்தன்மைக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும், அது பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் சங்கம் எச்சரிக்கிறது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலகவுக்கு குறித்த சங்கத்தால் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், "இலங்கை புற்றுநோயியல் சங்கம் நோயாளிகளுக்கு ஏற்படும் தீங்கைக் குறைப்பதற்கான அனைத்து வழிகளையும் தீவிரமாகப் பின்பற்றி வருகிறது, மேலும் உங்கள் நிறுவனத்தின் தலைவராக, இந்த விஷயத்தில் உடனடி மற்றும் முழுமையான விசாரணையை நடத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்," என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகம் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக தெளிவுபடுத்தவும், சிக்கல்கள் உறுதிப்படுத்தப்பட்டால், தயாரிப்பை பிரதான நீரோட்டம் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து அகற்றவும் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், எதிர்காலத்தில் ஆராய்ச்சியின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் சங்கம் பல்கலைக்கழகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கை புற்றுநோயியல் சங்கம் இந்தப் பிரச்சினையின் அவசரத்தை வலியுறுத்தி, நிரூபிக்கப்படாத புற்றுநோய் சிகிச்சைகளை ஊக்குவிப்பது நோயாளிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஆழமான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று எச்சரித்தது.