மாணவர்களின் உயிரிழப்பால் பெரும் சோகத்தில் அம்பாறை மக்கள்; தேடும் பணி தொடர்கிறது
அம்பாறை காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் நேற்று வரை 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
காணாம்ல்போனோரை தேடும் பணியில் இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது.
தொடரும் தேடுதல் நடவடிக்கை
மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன.
சம்பவத்தில் இந்நிலையில் முகமட் ஜெசில் முகமட் சாதீர் (வயது – 16), பாறுக் முகமது நாஸிக் (வயது 15), சஹ்ரான் (வயது 15), அப்னான் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டனர்.
தஸ்ரிப், யாசீன் ஆகிய மாணவர்களையும், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரையும் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் (26) செவ்வாய்க்கிழமை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கி 13 பேருடன் சென்ற உழவு இயந்திரமே காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற 5 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். 6 மாணவர்களும், உழவு இயந்திரத்தின் சாரதியும், உதவியாளரும் என 8 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தனர்.
சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே காணாமல்போயிருந்த 8 பேரில் நால்வர் நேற்று சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில் ஏனைய நால்வரையும் தேடும் நடவடிக்கை தொடர்கின்றது.
இந்நிலையில் மாணவர்களின் உயிரிழப்பு அம்பாறை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.