மிகப்பயங்கரமான கட்டத்தில் இலங்கை: மக்கள் தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்!
மிகப்பயங்கரமான கட்டத்தில் இலங்கை இருக்கிறது இனியும் அரசை நம்பாமல் மக்கள் தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
சமூகம் மீடியாவிற்கு வழங்கிய விஷேட செவியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா பெரும் தொற்று உருவாகி இரண்டு வருடங்களை தாண்டியுள்ள நிலையில், இலங்கை தற்போது நாலாவது கட்டத்தின் உச்சத்தில் உள்ளது என கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்திலும் பரவல் அதிமாகியுள்ளது, தென்னிலங்கையில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகிறது, வைத்தியர், தாதியர் உட்பட்ட ஊழியர்களின் பற்றாக்குறை, அவர்களுக்கு தேவையான வழங்கல் பற்றாக்குறை உள்ளதெனவும் இவற்றை தாண்டி செல்வதென்பது இலகுவானதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பூசிகள் பல நாடுகளிலிருந்து வருகிறது, தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் உயிரிழந்துள்ளமையும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே இந்த அச்சத்தில் இருந்து மக்களை விடுவிக்க வைத்தியர்கள் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு இருக்கும் தயக்கத்தினை நீக்க வேண்டும். என்னை பொறுத்த வரையில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் மக்கள் அனைவரும் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் தெரிவிக்கிறேன்.
தவிர இலங்கையில் தற்போது விலைவாசி அதிகரிப்பு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
200, 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட மஞ்சள் தற்போது 5000 ரூபாய் விற்க்கப்படுகிறது, அங்கர் பால்மாவை காணவில்லை, சீனி 200 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது, அரிசியின் விலை அதிரித்துள்ளது இந்த கோத்தா ஆட்சியில்.
அம்பாந்தோட்டையில் கடந்த காலங்களில் துறைமுகம், மத்தள விமான நிலையம் போன்றவற்றை பல நூறு மில்லியன்கள் கடன் வாங்கி அமைக்கவேண்டிய அவசியம் என்ன? இதன் மூலம் வருமானமீட்ட முடியாமல், இதற்கெல்லாம் வட்டி கட்ட முடியாமல், 99 வருட குத்தைக்கு விட்டுவிட்டு நாட்டையே அதளபாதாளத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள்.
மேலும் இன்று காணிகளை விற்கும் நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளது, நாம் தற்போது பொருளாதாரத்தில் முன்னேறி செல்வதென்பது இலகுவான காரியமில்லை, இன்னும் சீனாவில் தங்கியிருக்கும் நிலை மாறவில்லை, இருந்த போதும் உலக வங்கியிடமிருந்தும், உலக நாடுகளிலிருந்தும் கடன் வாங்கும் முயற்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன.
உண்மையில் விடயமென்னவென்றால், இலங்கையினுடைய வெளிநாட்டு கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படும் வரை, ஜரோப்பிய, அமெரிக்க நாடுகளிடமிருந்து இவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.