கிராமப்புறப் பாடசாலைகளிலும் தரமான கல்வி; தென்மராட்சி கல்வயல் ஶ்ரீ சண்முகானந்த வித்தியாலயம் பெரும் சாதனை!
கல்வித் துறையில் தொடர்ந்து முன்னேற்றத்தைப் பதிவு செய்து வரும் யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி - கல்வயல் ஶ்ரீ சண்முகானந்தா வித்தியாலயம், 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இப்பாடசாலையில் இம்முறை 29 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். அவர்களில் 14 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டி சித்தியடைந்துள்ளனர்.

93% மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை
இதன்படி பாடசாலையின் வெட்டுப்புள்ளி சித்தி வீதம் 48.2% ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், இப்பாடசாலையின் 27 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
இதன் மூலம் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம் 93% ஆக அமைந்துள்ளது. மாணவர்களின் பெறுபேறுகளில் அதிகபட்சமாக 165 புள்ளிகள் பெறப்பட்டுள்ளதுடன், அடுத்த நிலையில் 154, 148, 152 மற்றும் 140 புள்ளிகளை மாணவர்கள் பெற்றுள்ளனர். இது மாணவர்களின் கல்வித் திறனையும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான கற்பித்தல் பணியையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
நந்தகோபால் சிவராம் 165, ஜெயகரன் அனன்யா 160, உமாகரன் தனுவிகா 160, திலீபன் கேசிகா 160, சுஜித்குமார் திவ்யன் 146, சுரேஸ்குமார் மாதுளன் 145, மோகனபாலன் தன்சிகா 144, இந்திரவர்மன் ஜெயவசியா 141 , ஜெகன் மோகித் 140, குகநேசன் நிலுக்ஷன் 140, செந்துரன் ஆதீரன் 139, பகீரதன் ஹர்ஷிதா 135, றமணன் துவேணிகா 134 , அயந்தன் பிரவின் 134, குறிப்பாக, பாடசாலையின் அதிபர், தரம் 5 ஆசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒருங்கிணைந்த முயற்சியே இச்சாதனைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை முறையாகத் திட்டமிட்டு முன்னெடுத்தல், தொடர்ச்சியான மதிப்பீடு, மீள்கற்பித்தல், தனிநபர் வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் போன்ற செயற்பாடுகள் பெறுபேறு உயர்வுக்கு பங்களித்துள்ளன.
இச்சாதனை தொடர்பாக பாடசாலைச் சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், எதிர்காலத்திலும் மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை மேலும் உயர்த்துவதற்கான செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
“கிராமப்புறப் பாடசாலைகளாலும் தரமான கல்வியை வழங்கி சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும்” என்பதற்கு இச்சாதனை மற்றுமொரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
யா/கல்வயல் ஶ்ரீ சண்முகானந்த வித்தியாலயத்தின் இச்சிறப்பான சாதனைக்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலைச் சமூகத்தினருக்கு பாராட்டுக்கள்.