யாழ் வேலணை மத்திய கல்லூரி அருகே விசமிகள் செயல்! மக்கள் விசனம்
யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரி மைதானத்தின் கிழக்குப் பகுதியில் விசமிகளால் திட்டமிட்டு தீ மூட்டப்பட்டதில், அப்பகுதியில் காணப்பட்ட நிழல்தரும் மரங்கள், புற்றரைகள் உள்ளிட்ட தாவரங்கள் தீக்கிரையாகியுள்ளன.
நேற்று இடம்பெற்ற இந்த தீ மூட்டல், காற்றின் வேகத்தால் விரைவாகப் பரவியதால் மைதானத்தின் கிழக்குப் பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

பல நூறு ஏக்கர் நிலப்பரப்புகள் தொடர்ச்சியாக தீக்கிரை
சம்பவம் தொடர்பில் பாடசாலை சமூகத்தினர் வேலணை பிரதேச சபைக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, சபையின் நீர் பவுசர் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், தனியார் நீர் பவுசரும் வரவழைக்கப்பட்டு இரண்டு பவுசர்கள் மூலம் நீர் பாய்ச்சி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
வேலணை பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக வயல்கள், புற்றரைகள் மற்றும் பனங்கூடல்கள் உள்ளிட்ட பல நூறு ஏக்கர் நிலப்பரப்புகள் தொடர்ச்சியாக தீக்கிரையாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சுற்றுச்சூழல் மட்டுமன்றி பறவைகள், கால்நடைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான திட்டமிட்ட தீ மூட்டல் சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய தரப்பினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.