உக்ரைனில் இருந்து வெளியேற மறுக்கும் இலங்கையர்கள் !
ரஷ்யா - உக்ரைன் போரில் இன்னும் தணையாத நிலையில் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறமுடியாது என அங்குள்ள 27 இலங்கையர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த விடயத்தினைக் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் 15 மாணவர்கள் உட்பட 81 இலங்கையர்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் மாணவர்களைத் தவிர அங்கு வசித்த 66 இலங்கையர்களில் 39 பேர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் போலந்து, ருமேனியா, ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும், அதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை தூதரகம் செய்துகொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது உக்ரைனில் 27 இலங்கையர்கள்தான் இருக்கின்றனர். தற்போது உக்ரைனில் இருந்து வெளியேறமுடியாது என தூதரகத்துக்கு அவர்கள் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.