இலங்கை வர்த்தகருக்கு மரண தண்டனை ; வெளியான பின்னணி
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
சிலாபம் பிரிவின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் 2017ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

போதைப்பொருள்
அந்த சுற்றிவளைப்பின்போது,பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் எடை 211 கிலோ 818 கிராமாக இருந்ததுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வாளர் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அதில் 136 கிலோ 99 கிராம் தூய ஹெரோயின் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், 2017ஆம் ஆண்டு இலங்கையில் தனிநபர் ஒருவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவாகும்.
இதன் பெறுமதி சுமார் 100 கோடி ரூபாவுக்கு அண்மித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.