தனியார் நிறுவனத்திற்கு வந்த கொள்கலனில் காத்திருந்த அதிர்ச்சி
பேலியகொடை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பொருட்களை கொண்டுவந்திருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான 7 பொதிகளில் இருந்து 1,469 சட்டவிரோதமான ஈ-சிகரெட்டுகள் கொழும்பு மத்திய வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கொள்கலனில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கொழும்பு மத்திய வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, 2026 செப்டம்பர் 16ஆம் திகதி இச்சோதனை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணை
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் இச்சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது, உரிமையாளர்கள் எவரும் உரிமை கோராத 7 சந்தேகத்திற்கிடமான பொதிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதிலிருந்து 1,469 ஈ- சிகரெட்டுகள், ஈ-சிகரெட்டுகளுக்கு மீள் நிறப்பு திரவம் அடங்கிய 145 சிறிய திரவப் பெட்டிகள், 94 ஈ-சிகரெட் கார்ட்ரிட்ஜ்கள் மற்றும் 400 கிராம் எடையுடைய 1,520 கொலாஜன் டின்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் 220 ஈ-சிகரெட்டுகள் அடங்கிய பொதியொன்றிற்கு உரிமை கோரி கலஹெடிஹேனை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் வருகை தந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.