தனித்தீவில் சிக்குண்டிருந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டனுக்கு!
டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை அதிகாரிகள் பிரிட்டனிற்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சின் நிதி உதவியுடன் அவர்கள் ஆறு மாதங்களிற்கு பிரிட்டனில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தான் பார்வையிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
60 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள்
பிரிட்டனிற்கான அவர்களின் பயணத்துடன் அவர்களது தலைவிதியை தீர்மானிப்பதற்காக கடல்கடந்து இடம்பெற்ற சட்டபோராட்டங்கள் முடிவிற்கு வந்துள்ள நிலையில் அவர்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த 60 புகலிடக்கோரிக்கையாளர்கள் கடந்த மூன்று வருடகாலமாக இங்கிலாந்து அமெரிக்காவின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவம் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவில் தற்காலிக முகாமில் வசித்துவந்தனர்.
அதேவேளை டியாகோ கார்சியாவிலிருந்து புகலிடக்கோரிக்கையை சமர்ப்பித்த முதல் புகலிடக்கோரிக்கையாளர்கள் இவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
புகலிடக்கோரிக்கையாளர்களை பிரிட்டனிற்கு அழைத்து சென்றுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் அரசாங்கத்தின் பேச்சாளர் ,
38 மாதங்களாக மிக மோசமான நிலை
இந்த விவகாரத்தில் விதிவிலக்கான தன்மை காரணமாக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் ஒரு ஆழமான சிக்கலான முன்னைய அரசதாங்கத்தின் கீழ் தீர்வுகாணப்படாமலிருந்த சூழ்நிலையை சுவீகரித்துக்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டியாகோர் கார்சியா தீவில் காணப்பட்ட மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இது ஒரு அர்த்தபூர்வமான தீர்வு என புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலரை பிரதிநிதித்துவம் செய்த லெய்டே என்ற பிரிட்டனின் சட்டநிறுவனத்தின் டெசா கிரெகரி தெரிவித்துள்ளார்.
16 சிறுவர்களை உள்ளடக்கிய இந்த பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள குழுவினர் 38 மாதங்களாக மிக மோசமான நிலையில் சிக்குண்டிருந்தனர் என தெரிவித்துள்ள அவர் , எங்கள் கட்சிக்காரர்கள் தற்போது பாதுகாப்பான புகலிடக்கோரிக்கையை முன்வைக்க முடியும்,தங்கள் வாழ்க்கைய மீள கட்டியெழுப்ப முடியும் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.