மாவீரர் தின நிகழ்வு கொண்டாடியவர்களை ஏன் கைது செய்யவில்லை; சிஐடியிடம் கேள்வி எழுப்பிய நீதவான் !
நாட்டில் மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிலரை பொலிஸார் கைது செய்திருந்த நிலையில் , மாவீரர் நிகழ்வுகளை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு ஏன் அவர்களை கைது செய்யவில்லை என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரசாரம்
மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த காணொளியை சமூக ஊடகங்கள் வாயிலாக திரித்து இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரசாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்னிலங்கையில், கெலும் ஹர்ஷன கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரை பிணையில் விடுதலை செய்த போது, நிகழ்வினை நடத்தியவர்களை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதவான் , சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்கான சட்ட அவகாசம் குறித்த தகவல்களை முன்வைக்குமாறு , குற்ற விசாரணைப் பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
அதேவேளை எந்தவொரு அரசாங்கமும் செய்யாத வகையில் சமூக ஊடகப் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது என மனுதாரர் தொடர்பாக வாதிட்ட சட்டத்தரணி மனோஜ் கமகே , நீதிமன்றத்துக்கு வெளியே வந்து ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று எனது கட்சிக்காரரான கெலும் ஹர்ஷன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மாவீரர் கொண்டாட்டம் மற்றும் பிரபாகரனின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
சிவாஜிலிங்கத்துக்கு பொலிஸார் அனுமதி
முகநூல் சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக மாவீரர் நினைவுச் சின்னம் மற்றும் அது தொடர்பான விடயங்களை வெளியிடுவதில் எனது கட்சிக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவித்துள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனவே, அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இதன்போது நாம் முன்வைத்த விடயம் என்னவெனில், இந்த நாட்டில் மாபெரும் மாவீரர் வைபவம் நடைபெறுவதாக வெகுஜன ஊடகங்கள் தெளிவாக செய்தி வெளியிட்டிருந்தன.
பிரபாகரனின் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்கு , பிரபாகரனின் படத்தை மூடிவிட்டு, பிறந்தநாள் கொண்டாட்டத்தை அப்படியே நடத்த பொலிஸார் அனுமதித்தனர்.
அதேவேளை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனை கடவுள் என்று பேசியதை பார்த்தோம். அப்படியானால், அப்படிப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கிறார்கள்.
எனது வாடிக்கையாளர் வித்தியாசமான ஒன்றைச் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பிரபாகரன் போன்ற கொடூர பயங்கரவாதி நரகத்திற்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே இது ஊக்குவிப்பு அல்ல. மாவீரர் வார விழாக்கள் பல்வேறு வழிகளில் நடைபெற்றன. இறந்தவர்களைக் கொண்டாடுவதாகக் கூறப்பட்டது. பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடிய சிவாஜிலிங்கத்தை கைது செய்யாமல், அவர்களுக்கு அந்த சுதந்திரம் கிடைத்திருந்தால், தென்னிலங்கை மக்களுக்கு கருத்து தெரிவிக்க உரிமை இருக்க வேண்டும்.
இங்கு, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கும் உரிமை, அரசியல் சாசனம் அறிவித்த பேச்சு, கருத்து சுதந்திரம் ஆகியவை நீதிமன்றத்தின் முன் உறுதிப்படுத்தப்பட்டதுதான் இன்றைய மிகப்பெரிய மகிழ்ச்சி என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே ஊடகங்களிடம் கூறினார் .