உலகளாவிய ஆங்கில மொழியிலான மேடைப்பேச்சு ; லண்டனில் இலங்கை மாணவனின் சாதனை
லண்டனில் நடைபெற்ற சர்வதேச மேடைப்பேச்சு போட்டியில் (International Public Speaking Competition – IPSC 2026) இலங்கையைச் சேர்ந்த ஒமர் ஹசாரி என்ற மாணவர் முதலிடம் பெற்று உலக சாம்பியன் பட்டத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்திய 19 வயதுடைய ஒமர் ஹசாரி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
பிரித்தானியாவின் The English-Speaking Union UK அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த சர்வதேச போட்டியில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

கடும் போட்டிக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற ஒமர் ஹசாரி, தனது சிறப்பான பேச்சுத் திறமையால் நடுவர்களின் பாராட்டைப் பெற்று முதலிடத்தை கைப்பற்றினார்.
இப்போட்டியில் ருமேனியாவைச் சேர்ந்த மாணவர் இரண்டாம் இடத்தையும், உகாண்டாவைச் சேர்ந்த மாணவர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இறுதிச் சுற்றில், தனது சிறுவயது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒமர் ஹசாரி ஆற்றிய உரை நடுவர்களை பெரிதும் கவர்ந்தது.
பாடசாலைப் பருவத்தில் எதிர்கொண்ட கேலி, அவமதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட திக்குவாய் குறைபாட்டை பிறரின் ஆதரவுடன் எவ்வாறு வெற்றிகரமாகக் கடந்து வந்தார் என்பதை அவர் உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டார்.
அத்துடன், பாடசாலைகளில் இடம்பெறும் கொடுமைப்படுத்தலுக்கு (Bullying) எதிராக தனது பாடசாலையில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை சென்றடைந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்பித்த அனுபவத்தையும் தனது உரையில் எடுத்துரைத்தார்.
இந்த வெற்றியின் மூலம், உலகளாவிய மேடைப்பேச்சு போட்டியில் இலங்கை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது. இதற்கு முன்னர், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற இதே போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சஷேன் தசநாயக்க உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.
தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டும் இலங்கை மாணவர்கள் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது, சர்வதேச அரங்கில் இலங்கை இளைஞர்களின் பேச்சாற்றல், தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத் திறனுக்கு கிடைத்துள்ள மற்றுமொரு முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.