தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய இலங்கை அரசியல்வாதிகள்
தமிழக தேர்தலில் வெற்றியீட்டிய தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான குழுவினருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், பாராளுமன்றத்தில் இன்று (05) தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
அதேசமயம் விஜய்க்கு பாராளுமன்றத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கச்சத்தீவை விஜய் கேட்டுள்ளார். அது தொடர்பிலும் கேள்வி எழுப்பினார்.

உங்களின் பயணம் மிகவும் அசாதாரணமானது
மேலும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர எம்.பி. வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
'தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோசப் விஜய் சந்திரசேகர் மற்றும் அவரது முன்னோடி அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
2024இல் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி இவ்வளவு குறுகிய காலத்தில் மக்கள் ஆணையைப் பெற்ற உங்களின் பயணம் மிகவும் அசாதாரணமானது. விஜய் வாரிசு அரசியலையும் வம்ச அரசியலையும் எதிர்த்து தமிழக மக்கள் பெருவாரியாக ஏற்றுக்கொண்ட ஒரு புதிய மாற்றுக்கு வழிவகுத்துள்ளார்.
அவருக்கு எங்களின் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முடிவை நனவாக்கிய தமிழக மக்களையும் நாங்கள் வாழ்த்துகிறோம்' என அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.