இந்தியாவில் கைதான இலங்கை பொலிஸ் அதிகாரி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 35 வயதுடைய பொலிஸ் அதிகாரி கடந்த 5.9.2020 ஆம் திகதி நள்ளிரவு படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் பொலிஸார் இவரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம்
விசாரணையில் கொழும்பில் பறிமுதல் செய்து துறைமுகம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மாயமானதில் அவரது சகோதரர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் போதைப்பொருளை குறித்த பொலிஸ் அதிகாரி கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலீசாருக்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி பொலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இவ் வழக்கில் நேற்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி , அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
விதிக்கப்பட்ட சிறை தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல், அவர் சிறை மற்றும் சிறப்பு முகாமில் இருந்து உள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்தும், அவர் காவல்துறை மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.