மனித கடத்தலில் ஈடுபடும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்; SLBFE அதிரடி!
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் மனித கடத்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) சட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
துபாய் சுத்தா என்ற பெயரில் , உள்ள இலங்கையரே இவ்வாரு மனித கடத்தலில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது.

மால்டோவா வேலை வாய்ப்பு விளம்பரம்
சந்தேக நபர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி, இலங்கையில் வேலை தேடுபவர்களுக்கு மால்டோவாவில் வேலை வாய்ப்புகள் உள்ளதாக விளம்பரம் செய்து பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்த விளம்பரங்களுக்கு பதிலளித்த பலர் பணம் செலுத்திய பின்னர் ஏமாற்றப்பட்டதாக பணியகத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வகை மோசடிகள் நிதி இழப்புகளுக்கு மட்டுமின்றி, மனித கடத்தல் போன்ற கடுமையான ஆபத்துகளுக்கும் வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1985 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக தொழிலாளர்களை நியமிக்க அனுமதி பெற்றுள்ளன என்றும், உரிமம் இன்றி ஆட்சேர்ப்பு அல்லது பணம் வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் மட்டுமே உறுதி செய்யவும், சமூக ஊடகங்களில் வேலைகளை விளம்பரப்படுத்தும் நபர்களிடம் பணம் அல்லது தனிப்பட்ட ஆவணங்களை வழங்க வேண்டாம் என்றும் SLBFE பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.