நாடு கடத்தல் உத்தரவு ; பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்படும் இலங்கை குடும்பம்!
பிரித்தானியாவில் இருந்து இலங்கைத் தாய் மற்றும் அவரது மூன்று பிள்ளைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்க்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தை விட்டு வெளியேற 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட மூன்று குழந்தைகளைக் கொண்ட தாய், "என் குடும்பத்தைப் பிரித்துவிடாதீர்கள்" என்று கெஞ்சுகிறார்.

14 நாட்கள் அவகாசம்....
பிரித்தானியாவில் உதவி ஆசிரியையாக பணி புரியும் 45 வயதான சமிலா தில்ரக்ஷி மற்றும் அவரது பிள்ளைகளுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை , அவரது கணவர் ரசிக சமரசிங்கவிற்கு பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய விசா நடைமுறைகளின் கீழ் 2022ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக பிரித்தானியாவிற்கு வருகை தந்த நிலையில் நாடு கடத்தல் உத்தரவு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இலங்கை குடும்பம் தெரிவித்துள்ளது.
கணவனுக்கு தொடர்ந்தும் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தன்னையும் பிள்ளைகளையும் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளதாக சமிலா தில்ரக்ஷி குறிப்பிட்டுள்ளார்.
தந்தையை பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கு மன ரீதியான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், உள்துறை அமைச்சு இது குறித்து கரிசனை கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட இலங்கை குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது.