போலி கனேடிய கடவுச்சீட்டுடன் பயணித்த இலங்கையர் தாய்வானில் கைது
சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்டுடன் சிக்கியுள்ளார்.
தாய்வான் உள்துறை அமைச்சின் தேசிய குடிவரவு முகவரகத்தின் தகவலின்படி, அவரது கடவுச்சீட்டில் காணப்பட்ட முரண்பாடுகளை EVA Air நிறுவன ஊழியர்கள் முதலில் அவதானித்துள்ளனர்.

இதையடுத்து விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், ஆவணப் பரிசோதனை மற்றும் அடையாளச் சரிபார்ப்பின் மூலம் கடவுச்சீட்டு போலியானது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் குறித்த நபர் விமானத்தில் தொடர்ந்து பயணிப்பதற்கு தாய்வான் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
விசாரணையின்போது தனது ஆவணங்களில் பிரச்சினைகள் உள்ளதா என ஆராய்ந்த அதிகாரிகள், போலி கடவுச்சீட்டு பயன்படுத்தியதை குறித்த நபர் மறைக்க முயன்றதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகாரிகள் கடவுச்சீட்டின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதித்து, அதிலுள்ள தகவல்களை அவரது அடையாளத் தகவல்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.
மேலும், விசாரணையில் சரியாக பதில் வழங்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன் பின்னர் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த இலங்கையர் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.