பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவு; முதலமைச்சர் விஜய் இரங்கல்
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய கலைப்பணி
“பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை இரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சௌகார் ஜானகியின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.
சௌகார் ஜானகியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.