பலஸ்தீன் விண்ணப்பத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களிப்பு
ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன உறுப்புரிமைக்கான விண்ணப்பத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளம் மூலம் இதனை அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம்
ஐக்கிய நாடுகள் சபையில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்தின் ஊடாக எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானமானது சர்வதேச அரங்கில் சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடையாளப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலைமை மிகவும் சிக்கலானதாக இருந்தபோதிலும், பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் அமைதியான தீர்வைப் பின்பற்றுவது மிகவும் சாத்தியமான பாதை என்று இலங்கை நம்புகிறது.
பலஸ்தீனத்தின் ஐ.நா உறுப்புரிமைக்கான முயற்சியை ஆதரிப்பதில் பெரும்பான்மையான சர்வதேச சமூகத்துடன் இலங்கையும் இணைந்து கொள்கிறது.
இதன் மூலம், நீண்டகால இஸ்ரேல்-பலஸ்தீன மோதலுக்கு விரிவான மற்றும் நியாயமான தீர்வின் அவசரத் தேவையை எடுத்துரைத்து, மோதலில் இராஜதந்திரத்தை வலியுறுத்தும் சக்திவாய்ந்த செய்தியை இலங்கை அனுப்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்தின் உறுப்புரிமைக்கான விண்ணப்பம் மீதான வாக்கெடுப்பில் இலங்கை உட்பட 143 நாடுகள் ஆதரவாகவும் 9 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.