அநுரவின் ஆட்சி மூழ்கப் போகிறதா? எம்.பி. அர்ச்சுனா அதிரடி குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் படகில் ஓட்டை விழுந்துள்ளதாகவும் படகு உடைந்து மூழ்கப் போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
அரசாங்கம் கவிழ்வதற்கான அறிகுறிகள் தற்போது தெரிவதாகவும் இன்னும் ஒரு வருட காலப்பகுதிக்குள் ஆட்சி கவிழும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வரவு செலவு திட்டம் தோற்கடிப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த இராமநாதன் அர்ச்சுனா,“நளிந்த ஜயதிஸ்ஸ இரண்டு வாரங்களுக்குள் இதனை மீட்பதாக கூறியுள்ளார். அப்படி செய்தால் நல்லது.
ஜனாதிபதியை சுற்றியுள்ளவர்கள் இவ்வாறு அவருடைய படகில் ஓட்டைகளை உருவாக்கி வருகின்றனர்.
வடக்கில் முல்லைத்தீவிலும் கூட வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.