இலங்கை பணியாளர்கள் வெளிநாட்டில் உயிரிழந்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர் ஒருவர் பணியின்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் மரணம்
முன்னதாக, வெளிநாட்டில் மரணம் ஏற்படும் போது 6 இலட்ச ரூபாய் காப்பீட்டு இழப்பீடு வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது 14 இலட்சம் ரூபாய் சேர்க்கப்பட்டு 20 இலட்சம் ரூபாயாக இழப்பீடு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், இலங்கையில் வெளிநாட்டு ஊழியர்களின் கணவர் அல்லது மனைவி ஒரு தொழிலைத் தொடங்குவதற்காக கடன் திட்டம் ஒன்றை பணியகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலதிகமாக, வெளிநாட்டு ஊழியர்களின் சிறுவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிக்கவும், உயர்கல்வி பயிலும் சிறுவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஒகஸ்ட் மாதம் வரை வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு 5.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பியுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இது 7.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என்றும் கோசல விக்ரமசிங்க கூறினார்.
தற்போது 226,240 இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 3 இலட்சத்தை அண்மிக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.