உலகின் மூன்றாவது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை
உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையின்படி, இலங்கை உலகின் மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இலங்கை 254.5 என்ற போக்குவரத்து குறியீட்டுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
நைஜீரியா 320.3 என்ற குறியீட்டுடன் முதலிடத்திலும், கொஸ்டாரிகா இரண்டாம் இடத்திலும் உள்ளன. பங்களாதேஷ், கென்யா, எகிப்து, பெரு, ஈரான், இந்தியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன.

Numbeo நிறுவனம் பயனர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் இந்தக் குறியீட்டைத் தயாரிக்கிறது. ஒரு நாட்டின் போக்குவரத்து நிலையை மதிப்பிட பின்வரும் காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன.
நேர செலவீட்டு குறியீடு (Time Expenditure Index): ஒரு வழிப் பயணம் 25 நிமிடங்களுக்கு மேல் செல்லும்போது பயணிகளுக்கு ஏற்படும் அதிருப்தி மற்றும் சோர்வை இது கணக்கிடுகிறது.
திறமையின்மை குறியீடு (Inefficiency Index): பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு குறைவு மற்றும் தனிப்பட்ட வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை இது காட்டுகிறது.
CO2 வெளியேற்ற குறியீடு (CO2 Emission Index): தினசரி பயணத்தின் போது ஒரு பயணி வெளியிடும் காபனீரொட்சைட்டு அளவு இதன் மூலம் மதிப்பிடப்படுகிறது.
இந்த தரவுகள், இலங்கையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.