2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி ; ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதியை மோசடியாகப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவுத் தொகுப்பின் பிரதிகளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்குமாறு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்து விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது கண்டெடுக்கப்பட்ட 16 டெராபைட் கணினித் தரவுகளைக் கொண்ட வன்தட்டுக்கள் (Hard Disks), மேலதிக விசாரணைகளுக்காக ஏற்கனவே கொழும்பு பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னைய நீதிமன்ற அமர்வின் போது அறிவித்திருந்தது.
இந்த விசாரணைகளை மேலும் துரிதப்படுத்தவும், விரிவுபடுத்தவும் அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவுத் தொகுப்பின் பிரதிகள் அவசியமெனவும், அதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரியிருந்தது.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், விசாரணைகளுக்காக குறித்த தரவுகளை தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்குமாறு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.