நாட்டின் சுற்றுலாத்துறை வருமானத்தில் பாரிய வீழ்ச்சி
இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானம் கடந்த ஆண்டை (2025) விட நடப்பாண்டில் (2026) முதல் 9 மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 9 மாத காலப்பகுதியில் ஈட்டப்பட்ட சுற்றுலா வருமானம் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 9.2 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

மத்திய வங்கி தரவு
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 2472.9 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த சுற்றுலா வருமானம் நடப்பாண்டில் அதே காலப்பகுதியில் 2245.2 மில்லியன் அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.
மேலும் நடப்பாண்டில் முதல் 9 மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் மொத்தம் 1,639,679 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள போதிலும், இது கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடுகையில், 1.8 சதவீதம் குறைவு என்று மத்திய வங்கி தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.